புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார்
அப்போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின் அனுமதியை பெறாமல் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்த அனுமதியை பெற ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உதவியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரத்துக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் பலமுறை தடை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஓ.பி.சைனி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் மார்ச் 8-ந்தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
கார்த்தி சிதம்பரம் மார்ச் 5, 6, 7 மற்றும் 12-ந்தேதிகளில் விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.