பொள்ளாச்சி:
சிவகங்கையை சேர்ந்தவர் கவின்செல்வன்(வயது 35). இவர் மூலநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு காரில் சென்றார். அவருடன் அவரது தந்தை சுப்பிரமணி (55), மாமனார் கந்தசாமி(60) ஆகியோர் உடன் சென்றனர். அங்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொண்டு இன்று காலை ஊர் திரும்பினர்.
இவர்களது கார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கருமாபுரம் பகுதியில் உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்தது.அப்போது அரியலூரில் இருந்து கோழிக்கோட்டுக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி இவர்களது கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.
காரில் இருந்த கந்தசாமி, சுப்பிரமணி ஆகியோர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். கவின்செல்வன் படுகாயம் அடைந்தார். அப்பகுதி பொது மக்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான பாலக்காட்டை சேர்ந்த உன்னிகிருஷ்ணன்(40) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.