சென்னை, ஆக 1 –
முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைப்பெற்ற மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி அதன் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு வகைப்பட்ட சிறப்புப் பயிற்சிகளை வடிவமைத்து அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும் எனவும் வழியுறுத்தினார். தமிழ்நாட்டு மாணவர்களிடையே மாநில மற்றும் ஒன்றிய அரசுப்பணிகள் தொடர்பான போட்டித் தேர்வுகள் தகுதிகள் தேவையான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பாகங்கள் மூலம் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கவும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீ.ஃ அனைத்துத் துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம் படுத்தவும் அறிவுறுத்தினார்.
அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலினை மேம்படுத்தவும் தமிழக இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பினைப் பெருக்குவதற்கும் அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை உயர்த்திடவும் அறிவுறுத்தினார்.
பவானிசாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத்தால் அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சியினைக் காணொலிக் காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப் படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு நிதிஇத்துறைக் கூடுதல் தலைமைச்செயலாளர் ச.கிருஷ்ணன், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி கே. ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.