பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப் படும் எனவும் அதுப் போன்று மழைநீர் வடிகால் காலவாய்களில் குப்பையைக் கொட்டினால் ரூ100 அபராதம் விதிக்கப் படும் என்றும் செய்திக் குறிப்பொன்றை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை , செப் . 22 –

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப் படுகின்றன. இவைகள் தூய்மைப் பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டும் திடக்கழிவுகள் சேகரிக்கப் படுகின்றன.

இந்த திடக்கழிவுகளில் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் மறு சுழற்சி மையங்களில் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறு சுழற்சி செய்யப்படுகிறது. மக்காத குப்பைகள் பிரித்தெடுத்து, மறு சுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. இந்நிலையில் மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதாகவும், அதைப்போன்று சாக்கடை, மற்றும் திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டுவதாகவும் வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று முதல் நடை முறைப் படுத்துவதாக தெரிவித்துள்ளது.

மேலும் பொது மக்கள் குப்பைகள் இல்லா தூய்மை சென்னையை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தந்து பொது இடங்களிலும் நீர்நிலைகளிலும், நீர்வழித்தடங்களிலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்திடுமாறு வேண்டுகோளையும் அவ்வறிவிப்பின் மூலம் விடுத்துள்ளது. எனவே மாநராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களில் இருந்து கொண்டு வீதிகளில் வீசி செல்லுபவர்களுக்கு ரூ, 500 மற்றும் நீர் தேக்கம் மற்றும் வழித்தடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப் படும் எனவும் எச்சரித்துவுள்ளது.      

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here