சென்னை, ஜன. 15 –

அய்யன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்  பின்பு “தீராக்காதல் திருக்குறள்” திட்டத்தின் கீழ் ‘குறளோவியம்’ ஒவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கினார்.

உலகப்பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படும் உலகம் போற்றும் திருக்குறள் நூலை இயற்றிய அய்யன் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 1970-ஆம் ஆண்டு முதல் தைத்திங்கள் இரண்டாம் நாள் “திருவள்ளுவர் திருநாள்” எனவும், அதனை விடுமுறை நாளாகவும் அறிவித்து அரசாணை வெளியிட்டார். 

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தைத் திங்கள் இரண்டாம் நாளான அய்யன் திருவள்ளுவர் திருநாளன்று மாலை அணிவித்தும், மலர் தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. அய்யன் திருவள்ளுவருக்கான நினைவகமாக

1976-ஆம் ஆண்டு சென்னையில் வள்ளுவர் கோட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மேலும், 2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கன்னியாகுமரியில் 133 அடி உயர பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலையை நிறுவி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

திருக்குறளின் சிறப்பினை மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ளும் வகையில், 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களைப் பாராட்டி குறள் பரிசுத் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் தற்போது ரூ.10,000/- குறள் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.   

இத்தகைய சிறப்புமிக்க அய்யன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு இன்று (15.1.2022) தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

“தீராக்காதல் திருக்குறள்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘குறளோவியம்’ பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஒவியப் போட்டி

அதனைத் தொடர்ந்து, வான்புகழ் வள்ளுவன் இயற்றிய, முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய, உலகப் பொதுமறையாம் திருக்குறள்,  இன்றைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் “தீராக்காதல் திருக்குறள்” என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, முதலமைச்சர் ஆணையிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவதாக, ‘குறளோவியம்’ என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, குறட்பாக்களின் செம்மாந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தினசரி மேசை நாட்காட்டியாக அச்சிடப்பட்டும், அழகுற வரையப்பட்ட சிறந்த ஓவியங்களைத் தொகுத்து காலப்பேழை புத்தகமாகவும், நிகழும் திருவள்ளுவராண்டு 2053, தைத்திங்கள் 2-ஆம் நாளான திருவள்ளுவர் தினமான இன்று முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுப்பிய வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வெளியிட்டார்.

மேலும், இப்போட்டியில் பங்கேற்று பள்ளி அளவிலான பிரிவில் முதல் பரிசு பெற்ற செல்வி கு.ஜெய்கீர்த்தன்ஹா (சிந்திமாடல் சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை), இரண்டாம் பரிசு பெற்ற செல்வன் பு.கீர்த்திவாசன் (வேலம்மாள் வித்யாலயா, ஆலப்பாக்கம், சென்னை) மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற செல்வி மோ.சு.பிருந்தா (ஸ்ரீராமகிருஷ்ணாமிஷன் வித்யாலயா, சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர்) மற்றும் கல்லூரி அளவிலான பிரிவில் முதல் பரிசு பெற்ற திரு.வெ.ராஜேஷ், (அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்),  இரண்டாம் பரிசு பெற்ற திரு.ஆ. பாலாஜி (அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்), மூன்றாம் பரிசு பெற்ற திரு.க.ராஜேஷ் (அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை) ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் பரிசாக ரூ.50,000/-, இரண்டாம் பரிசாக  ரூ.30,000/-, மூன்றாம் பரிசாக  ரூ.20,000/- மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அத்துடன், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் மு.பாலாஜி பிரசாத் சிறப்பாக ஓவியம் வரைந்ததைப் பாராட்டி அவருக்கு முதலமைச்சர் சிறப்புப்பரிசு வழங்கினார்.

            இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர்  க. பொன்முடி, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர்  மகேசன் காசிராஜன்,  இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் / தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர்    முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., தமிழறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here