மயிலாடுதுறை, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் ( வயது 46) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் வினோத் தனது ஆட்டோவை திட்டை ரோடு சந்திப்பில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது முன்விரோதம் காரணமாக சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமு என்பவர் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அதில் தீ மளவென பரவி ஆட்டோவின் மேற்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. அதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.
அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த சீர்காழி போலீசார் தீ விபத்துக்குள்ளான ஆட்டோவையும், ஆட்டோவுக்கு தீ வைத்த லாரி டிரைவர் ராமு என்பவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அச்சம்பவம் தென்பாதியில் சிறிது நேரம் பரபரப்பையும் பேசும் பொருளாகவும் இருந்து வந்தது.