நீடாமங்கலம், ஜன. 04 –

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்களை, நீடாமங்கலம் எல்லைப் பகுதியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரின் கீழ் இயங்கி வரும் இரண்டு தனிப்படைகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் தணிக்கை சோதனை செய்தது.

இச் சோதனையின் போது, நீடாமங்கலம் தாலுகாவில் பூவனூர் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரஜினிகாந்த் என்பவருடைய வீடும் தணிக்கை செய்யப்பட்டது. இந்த தணிக்கையின் பொழுது சந்தேகத்திற்கு இடமான முறையில் அங்கு தங்கியிருந்த இரண்டு நபர்களிடம் அத்தனிப்படை காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

அவர்களின் தீவிர விசாரணையில் அவர்கள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த பாபு என்ற சத்திய பாபு மற்றும் சூர்யா என தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவர் மீதும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் இருவரும் பல்வேறு குற்ற செயல்கள் புரிந்து காவல்துறைக்கு பயந்து இங்கு வந்து தங்கி இருந்தது இவ்விசாரணையின் போது, அம்பலமானது. தொடர்ந்து அவர்களிடமிருந்து ஆயுதங்கள்  மற்றும் டொயோட்டா கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வருகிறது.

இதனைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவலர்கள் மற்றும் நீடாமங்கலம் காவல் ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெகுவாக பாராட்டினார்.

மேலும் மாவட்டம் முழுவதும் இந்த தணிக்கை தொடரும் என காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here