ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் விமானப்படை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எல்லைப்பகுதியில் நுழையலாம் என்பதால், பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் இருக்கும்படி விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய விமானப்படை விமானங்கள் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here