நேற்று நாடு முழுவதும் தேசிய விளையாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இத்தின கொண்டாட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்துக் கொண்ட சேப்பாக்கம் , திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர், வீரங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சீருடை வழங்கியும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உப கரணங்களையும் சேர்த்து வழங்கியும் அவர்களை உற்சாகப் படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சென்னை, ஆக. 30 –

 

உலக அரங்கில் விளையாட்டுத் துறையில் ஹாக்கி விளையாட்டின் மூலம் இந்தியாவிற்கு பெருமைச்சேர்த்த மேஜர் தயாள் சந்த் அவர்களின் பிறந்த நாளான ஆக 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டுத் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டுத்தின கொண்டாட்டம் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப் பெற்றது.

இந் நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தமிழ்நாடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையப் பயிற்சியாளர்கள் பதினைந்து பேருக்கு சீருடை தொகுப்புகள் மற்றும் குத்துச் சண்டை கால்பந்து தடகள வீரர் வீராங்கனைகள் 100 பேருக்கு விளையாட்டு உப கரணங்கள் மற்றும் சீருடை தொகுப்புகளை வழங்கினார்.

பின்பு அங்கு கூடியிருந்வர்களிடையே உரையாற்றினார். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் சமூக நீதி கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்த நலத் திட்டங்களை நினைவுப் படுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து அவர் வழியில் வந்த தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சமூகநீதி கொள்கை மற்றும் கூடுதலாக இளைஞர்களின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி குறிப்பாக அவர்களின் விளையாட்டுத் திறன் மற்றும் உடல் திறன் போன்றவற்றில் அக்கறைக் கொண்டு நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளார் என்று கூறினார்.

லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் தமிழகத்திலுள்ள கிராம, நகர்புற மாணவ மாணவியர்கள் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்க வேண்டும், தமிழகத்திலிருந்து தலை சிறந்த சர்வதேசத் தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கிட வேண்டும் என்ற வகையில் விளையாட்டுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி அவர்கள் மேம்பாட்டிற்காக அதிக கவனம் செலுத்தி வருகிறார் எனக் குறிப்பிட்டார்.

இந் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே சர்வதேசப் போட்டியான ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர் மேஜர் தயான் சந்த் என நினைவுக் கூறினார். மேலும் அவர் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை 1956 ஆம் ஆண்டு இந்திய அரசால் பெற்றவர். அவரது புகழினை மக்கள் அனைவரும் அறிகின்ற வகையிலும், இளைஞர்கிளிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தினை ஏற்படுத்துகின்ற வண்ணம் அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடப் படுகிறது என்றார்.

முதலமைச்சர் தமிழ்நாட்டின் குக்கிராமத்திலுள்ள சிறப்பாக விளையாடும் வீரர்களின் திறமையைக் கண்டறிந்து பன்னாட்டு வசதியுடன் கூடிய பயிற்சிகளை அளித்திடவும், அறிவியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரர் வீரங்கனைகளைச் சர்வதேச அளவில் பதக்கங்களைப் பெற உற்சாகப்படுத்தி வருகிறார் எனக் கூறினார்.

முன்னதாக விழாவினை முன்னிட்டு ஏரளமான வீரர் வீரங்கனைகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தினை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் சர்வதேச அளவில் சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் யோகா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்ற சீர்காழியைச் சேர்ந்த சுபானு அவர்களின் யோகா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந் நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மத்திய சென்னைப் பாராளு மன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் உறுப்பினர் ரமேஷ் சந்த் மீனா ஐ.ஏ.எஸ்., அர்ஜூனா விருதுப் பெற்ற நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here