தஞ்சாவூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
அமலாக்க துறையை ஏவி சோதனை செய்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். மேலும் தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் தலைப்புச் செய்தியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக பெட்ரோல், டீசல் விலையை பா.ஜ.க அரசு குறைத்து நாடகம் ஆடுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பீட்டர்அல்போன்ஸ் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் ஜனநாயக மரபு படியும் நியாயப்படியும் பாராளுமன்ற ஜனநாயகத்திலே எப்படி ஒரு தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டுமோ அப்படி நியமிக்கப்படவில்லை.எனவும், தேர்தல் ஆணையர்கள் நியமிக்க அந்த குழுவிலே இரண்டு அமைச்சர்கள் இடம் பிடித்தது எந்தவித நியாய தர்மமும் முற்படாத ஒரு ஏற்பாடு. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதில் இடம் பிடித்திருக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு
விசாரணைக்கு வருகிறது. என்றவுடன் அவசர கோலத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்த தகவல் வந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவிலே இது போன்ற ஒரு முறைகேடு நடைபெற்றது கிடையாது. அரசாங்கமே வழிப்பறி கொள்ளையர்களைப் போல தொழிலதிபர்களை மிரட்டி வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறை உள்ளிட்டவற்றை ஏவி சோதனை செய்து அவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பா.ஜ.க.வுக்கு வந்துள்ளது.
மேலும் அவர்களும் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் பணம் கொடுத்துள்ளனர். அது மோசமான செயல். மேலும் அது மிகுந்தக் கண்டிக்கத்தக்கது. அதற்கு பொறுப்பேற்று மோடி அரசு பதவி விலக வேண்டும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது தேர்தல் வரும் பொழுதெல்லாம் இவர்களுக்கு வாடிக்கையாக உள்ளது. இன்றைய தினம் தேர்தல் பத்திரம் குறித்த செய்தி தலைப்புச் செய்தியாக வந்து விடக்கூடாது என்பதற்காகவும் அது மக்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்தி விடக்கூடாதென்பதற்காகவும், இந்த இரண்டு ரூபாய் குறைப்பு என்ற செய்தியை தலைப்புச் செய்தியாக வரவைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்து வரும் நாடகமாகும்.
ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை மீறி இந்தியாவின் ஆன்மாவையே தட்டிக் கேட்கிற செய்தியாக இந்த செய்தி வந்திருக்கிறது. தேர்தல் வரும்போது குறைப்பதும் தேர்தல் முடிந்த பிறகு கூட்டுவதும் பா.ஜ.க அரசுக்கு கைவந்த கலை. கூட்டணியில் பல மாநிலங்களில் பிரச்சனை உள்ளது .இந்த பிரச்சனையில் என்ன ஒரு நல்ல கோணம் என்று சொன்னால் அந்த மாநிலங்களில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த வெற்றி இந்தியா கூட்டணி ஆதரிக்கின்ற வெற்றியாக இருக்கும் என்றார்.




















