சென்னை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை மேற் கொள்ளாத உயர் அரசு அலுவலர்களைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
சென்னை , ஆக. 30 –
சென்னை மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அக் குடிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை 7 எம் எல் டி கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றி வந்தனர்.
இதனிடையே அந்த சுத்திகரிப்பு நிலையம் முறையாக பராமரிக்கப்படாமல் போனதால் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலகத்திலும், உயர் அலுவலர்களிடமும் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையையும் மேற் கொள்ளாமல் அலுவலர்கள் அலட்சியப் போக்கை கடைப் பிடித்து வந்ததால் கழிவு நீர் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி நோய்தொற்று உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீட்டு வசதி வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் ஆத்திரமடைந்து அலட்சியத்தோடு நடந்து கொள்ளும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையத்தில் நுழைந்து உள்ளுறுப்பு போராட்டம் நடத்தி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்சினையை நீட்டிக்காமல் துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து குடியிருப்பு வாசிகளுக்கும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று வருவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.