புதுடெல்லி:
ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் தற்போது இருந்து இருந்தால் இன்றைய நிலைமையே வேறு, இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக மேலும் கூறும்போது, “ரபேல் விமானத்தில் எதிர்க்கட்சிகள் செய்த அரசியலால்தான் நமக்கு பாதிப்பு ஏற்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து அரசியல் கட்சிகள் கேள்விகளையும், சந்தேகங்களையும் முன்வைத்து இருப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
மோடி தெரிவித்த இந்த கருத்துக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் இன்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
அன்புக்குரிய பிரதமர் அவர்களே. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை திருடி உங்கள் நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்து உள்ளீர்கள். ரபேல் போர் விமானம் தாமதத்துக்கு நீங்கள் (பிரதமர் மோடி) மட்டுமே பொறுப்பு.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.