கும்மிடிப்பூண்டி, அக். 09 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு குளம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் அவ்வழியே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இப் பிரச்சினை சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பள்ளி மாணவர்கள் பகிரங்கமாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அவ்வழியின் வழியாக பள்ளிக்கு செல்லும் போது இக்குப்பையில் இருந்து எழும் புகை மூட்டத்தால் கண்ணெரிச்சல் மற்றும் தொடர் இருமல் ஏற்படுவதாகவும் இதனால் சரும நோய்கள் ஏற்படும் அச்சம் தங்களுக்கு எழுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் பல்வேறு சரும நோய் தொற்றுகள் உருவாகி வரும் நிலை உள்ளதெனவும், அதேபோல் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் கனமழையால் அரசு பள்ளியை ஒட்டி பல வருடங்களாக பழங்குடியின மக்கள் வாழும் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுக்கள் அதிகரித்து மாணவர்கள் பலர் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்படும் சூழலும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், மேலும் தற்போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளி அருகே உள்ள நெடுஞ்சாலையில் குப்பைகள், கோழி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் என பலதரப்பட்ட கழிவுகளை இப்பகுதியில் தொடர்ந்து கொட்டியும், எரிக்கப்பட்டும் வருவதால் பள்ளி மாணவர்கள் இளம் பருவத்திலேயே பலவித நோய் தொற்றுகளுக்கு ஆளாகக் கூடிய சூழல் நிலவுகிறது.
இதன் விளைவாக பிற்காலத்தில் அவர்கள் தொடர் நோயாளிகளாக மாற வாய்ப்புள்ளது எனவே மாவட்ட ஆட்சியர் சட்ட விதிமுறைகளை முறையாக கையாளாமல் கோழி கழிவுகளையும், மருத்துவ கழிவுகளையும் சாலையோரம் கொட்டி எரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், சமுக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.























