இராசிபுரம், ஜூன். 23 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் அஜித், 24. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்தது வந்துள்ளது. அப்பழக்கத்தின் போது அச்சிறுமி, தனது வீட்டில் அரைகுறை ஆடையுடன் இருப்பதை, அஜித் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
அதனை சிறுமியிடம் காட்டி, தான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அஜித், சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதையறிந்த சிறுமியின் தாய், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அஜித்தை பிடித்து, விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில் சிறுமியின் ஆபாச புகைப் படத்தை அஜித் சமூக வலைதளங்களில் வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை, போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், ராசிபுரம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















