கும்பகோணம், ஜன. 20 –
கும்பகோணம் பாணாதுறை ஜலசந்திரமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .
கும்பகோணம் பாணாதுறை கீழ வீதியில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஜலசந்திரமாரியம்மன் திருக்கோயில், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளக்கும் இம்மாரியம்மன் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 18ம் தேதி செவ்வாய்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்று, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது,
தொடர்ந்து 19ம் தேதி புதன் கிழமை இருவேளை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று 20ம் தேதி வியாழக்கிழமை 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹ_தியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, மூலவர் விமான கலசம் மற்றும் 11 ராஜகோபுர கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,
மேலும், மூலவர் ஜலசந்திரமாரியம்மனுக்கு விசேஷ கலசாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, தரிசனம் செய்து மகிழ்ந்தனர் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது





















