காஞ்சிபுரம், ஜன. 20 –

     காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான திருமால்பட்டு கிராமத்தில் இருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நிலம் செயற்கைக்கோள் உதவியுடன் நில அளவீடுகள் செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி தொடங்கியது.

     பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் இக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் பல ஊர்களில் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் அருகே திருமால்பட்டு என்ற கிராமத்தில் இக்கோயிலுக்கு சொந்தமான ரூ.ஒரு கோடி மதிப்பிலான 8.80 ஏக்கர் பரப்பளவிலான நிலம் அளவீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.

     தமிழக அரசு உத்தரவின்படி கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி நடந்து வரும் நிலையில் திருமால்பட்டு கிராமத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் நிலத்தையும் செயற்கைக் கோள் உதவியுடன் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    கோயில் நிலங்கள் பிரிவுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் வருவாய் அலுவலர் கல்பனா,வட்டாட்சியர் வசந்தி, காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் பொன்.ஜெயராமன்,கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறையின் கீழ் உரிமம் பெற்ற நில அளவையர்கள் ஆகியோர் முன்னிலையில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்லை இணை ஆணையர் பொன்.ஜெயராமன் நட்டு அப்பணியை தொடக்கி வைத்தார் திருமால்பட்டு கிராமத்தில் மட்டும் 70 எல்லைக் கற்கள் நடும் பணி நடந்து வருவாகவும் இதனையடுத்து திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையுமே செயற்கைக்கோள் உதவியுடன் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணிகள் தொடரும் எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here