கும்பகோணம், ஆக. 03 –
கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு படைத்து மிகவும் உற்சாகத்துடன் வழிப்பட்டனர்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால், மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இவ்விழா நீர்நிலைப்பகுதிகளில் நடைப்பெறும்.
அதுப்போன்று காவிரி ஆறு பாயும் பகுதிகளில் இவ்விழா ஆண்டு தோறும் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், களைக்கட்டியது.
மேலும், பெண்கள் ஒன்றுகூடி கரையில் வாழை இலையில் அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி, மஞ்சள், மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையலிட்டனர். பின்னர், மஞ்சள் கயிறை பெண்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதுத் தாலிக்கயிறு அணிந்து கொண்டனர்.
பகவத் படித்துறை, டபீர் படித்துறை, தாராசுரம் அரசலாறு படித்துறை, உள்ளிட்ட காவிரி, மற்றும் அரசலாறு ஆற்றின் படித்துறைகளில் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கூடி வழிபாடு செய்தனர்.
மேலும் ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், பலத்தப் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.




















