கும்பகோணம், மார்ச். 31 –
கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் தலைமையில் கட்டண கழிவறைக் குறித்த ஒப்பந்த வழங்கலுக்காக மன்றத்தில் அனுமதிக் கோரும் அவசரக்கூட்டம் நடைப்பெற்றது. அதுக்குறித்து மன்றத்தில் அனுமதிக்கோரியப் போது அதிமுக பெண் உறுப்பினருக்கும் துணை மேயருக்கும் கடும் விவாதம் நடைப்பெற்றது.
கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சில கட்டண கழிவறைகளுக்கு இன்றுடன் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், அதற்கான புதிய ஒப்பந்தப்புள்ளி நேற்று கோரப்பட்டிருந்தது. அதற்கான மன்றத்தின் அனுமதி பெறும் வகையில் இன்று மாலை மேயர் சரவணன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஆதிலட்சுமி , தற்போது கட்டண கழிவறைகள் குறைந்த ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதால் மாநகராட்சிக்கு சில ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
உடனடியாக மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், எழுந்து, அவருக்கு பதிலளிக்கையில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சியின் சைக்கிள் ஸ்டாண்ட் மூடப்பட்டுள்ளதால் நகராட்சிக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது .
இதுபற்றி கடந்த ஆட்சிக்காலத்தில் எதுவும் கூறாமல் இருந்த நீங்கள் தற்போது இது பற்றி பேசுகிறீர்கள் ? என வினா எழுப்ப அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த ஆதிலட்சுமி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இன்று கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் மன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. என துணை மேயர் தமிழழகன் அறிவித்ததுடன் கூட்டத்தையும் முடித்து வைத்தார்.






















