கும்பகோணம், ஜூன். 16 –
கும்பகோணம் அருகே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போழக்குடி என்ற ஊரில் 18 வயது பெண் உயிரிழந்துள்ளார். அதன் எதிரொலியாக அவ்வூரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட நபர்களிடம் சளி மாதிரி சேகரிப்பு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது பெண் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடும் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். இந்நிலையில் அவர் மதியம் 2.30 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 90 நாட்களில் கொரோனா பாதிப்புக்கு யாரும் உயிரிழக்காத நிலையில் இந்த முதல் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா போழக்குடி கிராமத்தில் இன்று 20 நபர்களிடம் கொரானா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு நடத்துவதற்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள்
இன்றோ அல்லது நாளையோ கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மருத்துவ முகாமும் நடைபெற்று வருகிறது.



















