திருவண்ணாமலை,அக்.16-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நீர்வரத்து அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றினை அகற்றி தூர்வாரப்படவேண்டும்; என்றும், சிறு பாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றிட பொதுப்பணித்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேங்கிக்கால் ஏரி முதல் கீழ்நாத்தூர் ஏரி வரை செல்லும் நீர்வரத்து கால்வாய் செல்லும் பாதையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் நீர் தேங்குவதாகவும், அதனை சரி செய்யக் கோரியும் பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வேங்கிக்கால் ஏரி, மற்றும் வேங்கிக்கால் சேரியந்தல் பகுதிகளிலும் கீழ்நாத்தூர் ஏரிக்கு செல்லும் கால்வாய், சென்னை செல்லும் சாலையில் நொச்சிமலை ஏரி அருகிலும், கீழ்நாத்தூர் ஏரி உள்ளிட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஏரிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கீழ் உள்ள வேங்கிக்கால் ஏரியின் தற்போதைய நீரின் இருப்பு 100 சதவீதம் உள்ளது. அடுத்த கீழ் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் தூரம் 1500 மீட்டர் ஆகும், கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சேரியந்தல் ஏரியின் தற்போதைய நீரின் இருப்பு 100 சதவீதம் உள்ளது. அடுத்த கீழ் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் தூரம் 1100 மீட்டர் ஆகும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நொச்சிமலை ஏரியின் தற்போதைய நீரின் இருப்பு 100 சதவீதம் உள்ளது அடுத்த கீழ் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் தூரம் 1400 மீட்டர் ஆகும், கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நாத்தூர் ஏரியின் தற்போதைய நீரின் இருப்பு 100 சதவீதம் உள்ளது அடுத்த கீழ் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் தூரம் 3ஆயிரம் மீட்டர் ஆகும்.
நீர்வரத்து கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள அவலூர்பேட்டை சாலை, நொச்சிமலை குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனை ஆய்வு செய்து மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி பொதுப்ணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாயத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து நீர்வரத்துக் கால்வாய் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகள் ஆகிவற்றினை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்பணியினை 10 தினங்களுக்குள் முடித்து எதிர்வரும் காலங்களில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்பி, மு.பெ.கிரி எம்எல்ஏ, உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.