சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு சிறப்பு நிதியாக வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதாக அறிவித்து சுமார் 60 லட்சும் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படுகிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 1200 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது.
தமிழக பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளிவர இருக்கிற ஒருசில நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களை கவருவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. நிதியிலிருந்து வாக்காளர்களின் வாக்குகளைப் பெற கொடுக்கப்படுகிற நிதிக்கு பதிலாக அரசு நிதியிலிருந்தே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை விட கொடூரமான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காத மக்கள் விரோத அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் இணைந்து இத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் வழங்குகிற உதவி நிதி எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது என்பதை வாக்காளர்கள் அறியாதவர்கள் அல்ல.
தமிழகத்தின் நிதிநிலையைப் பொறுத்தவரை ஏறத்தாழ ரூ.3 லட்சம் கோடி கடன் சுமையில் இருக்கிறது. இது மாநில மொத்த உற்பத்தியில் 23 சதவீதமாகும். தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மீதும் ரூ.55 ஆயிரம் கடன் சுமையை அ.தி.மு.க. அரசு சுமத்தியிருக்கிறது. கடனுக்காக வட்டி மட்டும் ஆண்டுதோறும் 33 ஆயிரத்து 226 கோடி ரூபாய் செலுத்தி வருகிறது.
இத்தகைய திவாலான நிலையில் இருக்கிற அ.தி.மு.க. அரசு தமிழக மக்களின் வறுமையைப் போக்குவதற்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதால் இத்தகைய தற்காலிக கவர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழாக வாழ்பவர்களுக்கு என்ன அளவுகோல்? இவர்கள் விவசாயத் தொழிலாளர்களா அல்லது வேறு எந்த வகை தொழிலாளர்கள்? இதை அறிந்து கொள்ள நிபுணர் குழு அமைக்கப்பட்டதா? ஏனோ தானோ என்று தேர்தல் நெருங்குகிற நேரத்தில் மக்களை மயக்கி, உதவித் தொகை வழங்கி வாக்குகளை பறிக்கிற முயற்சியில் எடப்பாடி அரசு ஈடுபட்டு வருகிறது.
அதேபோல, தமிழக அரசு வேலை வாய்ப்பு பதிவு அலுவலகத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதைப் பற்றி எடப்பாடி அரசு ஏன் கவலைப்படவில்லை?
தமிழகத்தில் உயர்நிலை அதிகாரிகளை பணிமாற்றம் செய்வதில் இடைத்தரகர்கள் மூலமாக லட்சக்கணக்கான ரூபாய் கையூட்டு பெற்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அரசு நிர்வாகம் முடங்கிப் போகிற நிலை ஏற்பட்டுள்ளது.
வருகிற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் சேர்ந்து நடந்தால் அதில் மத்திய மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் அ.தி.மு.க.வின் கவர்ச்சித் திட்டங்களால் மக்கள் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் உறுதியாக செயல்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.