ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையில் 8 கி.மீ துாரம் ரூ.35 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவுக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.
சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் நகரில் உள்ள அச்சுந்தயன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 49 மேம்படுத்திடும் வகையில் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக இருவழித்திடமாக உள்ள இச்சாலையினை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தபடவுள்ளது. இதற்காக மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி தொகைக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இச்சாலையில் மையதடுப்புடன் கூடிய நான்கு வழிச் சாலையாக 15.61 மீ அகலத்திற்கு மேம்படுத்தப்படவுள்ளது. இதில் 13 சிறு மற்றும் குறு பாலப்பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபால 12 இடங்களில் பஸ் நிறுத்த பகுதிகளும் 2.45 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகாலும் அமைக்கப்படவுள்ளது. இன்று துவக்கி வைக்கப்படும் இச்சாலை பணியானது மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி கோட்ட பொறியாளர்கள் மாரியப்பன், ரமேஷ், உதவி பொறியாளர்கள் சரத், மகேஸ்வரி, முருகன், வேலுமாணிக்கம் நிறுவன பங்குதாரர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.