காஞ்சிபுரம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க. செல்வம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரிய காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வேட்பாளர் செல்வம் கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் படைச்சூழ பேரணியாக சென்று மாநகராட்சி பகுதியில் வாக்குகளை சேகரித்தார்.
சங்கர மடம் வழியாக பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம், சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பவள மாளிகையில் அண்ணா மற்றும் கலைஞர் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும் திமுக ஆதரவு தொண்டர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முகமூடிகளை அணிந்தவாறு நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வழியெங்கும் பேண்ட் வாத்தியங்களில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் குத்தாட்டம் போட்டபடி உற்சாகமாக நடனமாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்தப் பேரணியில் பொழுது ஏராளமான இருசக்கர வாகனத்தில் திமுக கொடிகள் , கூட்டணி கட்சி கொடிகளை கையில் ஏந்தியவாறு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.





















