திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 144வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 33 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி நேரடியாக கண்காணிக்க உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறுகிறது.
மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சியான திருவண்ணாமலையில் 68,117 பெண்கள் 74,331 ஆண்கள் 12 திருநங்கைகள் உள்பட 1,42,460 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உளளனர். அதையட்டி திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் தேவையான மின்விளக்கு வசதி நிழற்பந்தல் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள நடைபாதை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 142 லட்சம் வாக்காளர்களுக்கு தேவையான புத் சிலிப் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. நாளை மறுநாள் 12ந் தேதி முதல் வீடுவீடாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த நகராட்சியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நகராட்சி அலுவலகத்தில் தயார்நிலையில் வைத்துள்ளனர். வாக்குபதிவின்போது நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சம் 1200 வாக்காளர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளனர். மேலும் பெண்கள் மட்டும் வாக்களிக்க வசதியாக 64 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கானதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 144வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 20 வார்டுகள் பதற்றமானவை எனவும் 13 வார்டுகள் அதிக பற்றமானவை எனவும் காவல்துறை தரப்பில் கண்டறிந்துள்ளனர். எனவே பதற்றமான 33 வாக்குச்சாவடிகளில் இணையதள வசதியுடன் வெப்கேமரா பொருத்தி தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக கண்காணிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


















