பெரியபாளையம், ஜன. 24 –
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வருபவர் உதயகுமார். மேலும் இவர் தினந்தோறும் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு சென்னை பெருநகர பகுதியில் உள்ள கொடுங்கையூர் எனும் பகுதிக்கு சென்று தினசரி காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்றும் தனது காய்கறி வியாபாரத்திற்காக கொடுங்கையூர் பகுதிக்கு சென்றுள்ளார். மேலும் இவர்களுடை இரண்டு மகள்களும் பள்ளிக்கு சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உதயகுமாரின் மனைவி மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இன்று நன்பகல் வேளையில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், அவர்களின் வீட்டின் மாடி வழியே வீட்டுக்குள் வந்து, மாலதியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் வைத்திருக்கும் பீரோ சாவியை எடுக்குமாறு மிரட்டியதாகவும்,
அப்போது, வீட்டில் எந்த பொருளும் இல்லை என மாலதி மறுத்ததாகவும், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மாலதியை அரிவாளால் வெட்டி பீரோ சாவியை எடுக்குமாறு மிரட்டியும்,
தொடர்ந்து மாலதியின் கைகளை கட்டி போட்டும், அவரது வாயை துணியால் கட்டிவிட்டு, சிறிது நேரத்தில் பீரோ சாவி இருக்கும் இடத்தை மாலதி கூறியவுடன் மர்ம நபர் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு பூட்டப்பட்டிருந்த வீட்டின் கேட்டை திறந்து கொண்டு மீண்டும் வெளிப்புறம் பூட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும்,
இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட மாலதி கூச்சலிட்டதாகவும், அதனைக்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், கொள்ளையடித்த மர்மநபர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அதனைத் தொடர்ந்து தாமதமாக வந்த அக்கம் பக்கத்தினர் வெட்டுக் காயங்களுடன் இருந்த மாலதியை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆரணி காவல்நிலைய காவல்துறையினர் அப்பகுதியில் இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இச்சம்பவத்தில் கொள்ளையாடித்துச்சென்ற மர்ம நபர் மாலதியை கை, கால், உடல் என சுமார் ஐந்து இடங்களில் வெட்டியுள்ளார் என்பது ஆரணி காவல்நிலைய காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மேலும் நேற்று இரவு சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக குடும்பத்துடன் சென்ற மாலதி நகைகளை அணிந்து சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது, இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர் யாரோ ஒருவர் இச்செயலில் ஈடுப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த மாலதிக்கு தொடர்ந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆரணி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப் பகலில் நடைப்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

























