திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் அதிகபட்சமாக 145 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்களால் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர்
எனவே வார்டு உறுப்பினர் பதவிக்கான ஆர்வம் இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் கூடுதலாக காணப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சியில் 1.42 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை 2.86 லட்சம் அதில் சுமார் 50சதவிதம் வாக்காளர்கள் திருவண்ணாமலை நகராட்சியில் மட்டும் இடம்பெற்றிருப்பது எனவே திருவண்ணாமலை நகராட்சி தேர்தல் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் தற்போது 271 பேர் களமிறங்கி உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 145 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 75 சதவிதத்தற்கும் மேற்பட்டோர் தேர்தல் களத்துக்கு புதுமுகங்கள் திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சியினருடன் இணைந்து களத்தில் இறஙகியிருக்கிறது.
திமுக நேரடியாக 35 வார்டுகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் 4 வார்டுகளில் போட்டியிடுகிறது. அனைத்து வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அதிமுக தனித்து 39 வார்டுகளிலும் நேரடியாக போட்டியிடுகிறது. அக்கட்சியுடன் கூட்டணியிலிருந்து பிரிந்துள்ள பாஜக 24 வார்டுகளிலும் பாமக 11வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தமும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலமும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். தற்போது திமுக, அதிமுக பாஜக பாமக தேமுதிக கட்சி நிர்வாகிகளும் மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் வீடுவீடாக சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.




















