திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா நாட்டு மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்தி கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. அதன்படி உணவு பதப்படுத்தும் சிறுநிறுவனங்களுக்கான திட்டத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளைபொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மணிலா நாட்டு மரச்செக்கு எண்ணெய் உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவிதம் அல்லது அதிகபட்சமாக  ரூ.10 லட்சம் வரை நிதிஉதவி பெறலாம். மேலும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தை வாய்ப்புக்கு 50 சதவிதம் மானியம் வழங்கப்படும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் கடன் தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் 2021-22ம் ஆண்டிற்கு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 130 நபர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மையம் மூலம் தனிநபர்களும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் மகளிர் சுயஉதவிக்குழுக்களும் வேளாண் துணை இயக்குநர் (வணிகங்கள்) மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here