ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், ஊரக பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் மற்றும் செலவின விபரம் குறித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சொர்ண மாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், சண்முகநாதன் உட்பட அரசு அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ஏர்வாடி ஊராட்சி:
ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தெற்கு தெரு திடலில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் சிறப்பு பங் கேற்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, கிராம வளர்ச்சி திட்டம் தொடர்பாக மக்கள் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றினர். பற்றாளராக ஒன்றிய பணி மேற் பார்வையாளரும் சைபுல் ரஹ்மான் தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் அஜ்மல் செய்திருந்தார்.
வாலாந்தரவை ஊராட்சி:
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிரம ஊராட்சி வளர்ச்சி திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல் சக்தி அபியான் திட்டம், வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் போன்ற பல்வேறு பொருள்கள் குறித்து கிராம பொது மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் அர்ஜூனன் செய்திருந்தார். ஊராட்சி பொது மக்கள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்றனர்.