ராமநாதபுரம், அக்.3-
ராமநாதபுரம் அரண்மனையில் கதர் கிராம தொழில் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு காந்தியடிகள் திருஉருவபடத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு கதர் விற்பனை நிலையத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்தார்.
அதன்பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம்,கிராமப்புற கைவினைஞர்களை கொண்டு நுாற்பு மற்றும் நெசவு தொழிலை முழுநேரம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கிட அனுமதி வழங்கியுள்ளது. தற்போது 2019ம் ஆண்டிற்கு ரூ.35 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்திலுள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந் நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன், தாசில்தார் தமிழ்செல்வி, கதர் விற்பனை மேலாளர்கள் சரவண பாண்டியன், ராமரத்தினம், முத்துக்குமார், சுப்பிரமணியன் உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.