சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மிகப்பெரிய தேசிய கட்சியும், மத்தியில் ஆளும் கட்சியுமான பா.ஜனதா தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வெறும் 5 தொகுதிகளுக்கு சம்மதித்ததை மற்ற கட்சியினர் அவமானமாக கருதி விமர்சிக்கிறார்கள்.
அரசியல் பார்வையாளர்களும் பா.ஜனதா எப்படி 5 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டது என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் வெறும் 5 தொகுதிகளுடன் பா.ஜனதா, அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்து கொண்டதின் பின்னணியில் சுவாரசிய தகவல்கள் உள்ளன.
டெல்லி பா.ஜனதா தலைவர்களும், தமிழக பா.ஜனதா தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களுடன் பல நாட்களாக கூட்டணி தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இறுதியில் 8 முதல் 10 தொகுதிகளுக்கு குறையாமல் பெற்று கூட்டணியை இறுதி செய்ய தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருந்தார். தமிழக பா.ஜனதா தலைவர்களும் 8 முதல் 10 வரையிலான தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
கூட்டணியை உறுதி செய்வதற்காக தமிழக பா.ஜனதா பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சு வார்த்தை நடந்தது.
பா.ம.க.வுடன் உடன்பாடு எட்டிய மகிழ்ச்சியில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது. பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் மற்றும் தமிழக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வைத்திலிங்கம் எம்.பி., முனுசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ம.க.வுடன் கூட்டணி உறுதி ஆனதால் நமது கூட்டணி இனி வெற்றிக் கூட்டணியாக மாறும் என்று கூறியபடியே அ.தி.மு.க.வினரும், பா.ஜனதாவினரும் பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். பா.ஜனதா தரப்பில் 8 முதல் 10 தொகுதிகள் கேட்கப்பட்டது.
அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாக எடுத்து வைத்த வார்த்தைகள் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அசர வைத்தது. தமிழக பா.ஜனதாவை பொறுத்த வரை அடிமட்டம் வரை சென்று தங்களின் செல்வாக்கு எப்படி? தொண்டர்களின் செயல்பாடு ஆகியவற்றை கணக்கெடுத்து கம்ப்யூட்டரில் பதிவேற்றி வைத்துள்ளனர்.
ஆனால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு வட்டாரம் வாரியாக, பகுதி பகுதியாக பா.ஜனதா கட்சியின் பலம் என்ன? பலவீனம் என்ன? எந்தெந்த வகைகளில் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விலா வாரியாக பட்டியல் போட்டு பா.ஜனதா தலைவர்களின் முன்பு வைத்தார். இந்த நிலையிலும் நீங்கள் 8 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்கள்.
நாம் கூட்டணி அமைப்பது வெற்றி பெறுவதற்குத்தான். பாராளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மோடி ஆட்சி தொடர வேண்டும். அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறோம். இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு உதவியாக இருக்கிறோம். எனவே உங்களின் பலம்- பலவீனத்தை தெரிந்து கொண்டு நீங்கள்தான் இறங்கி வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேச்சு நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமி பட்டியல் போட்டு சொன்ன தகவல்களை கேட்டு மத்திய மந்திரி பியூஸ்கோயல் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் அசந்து போனார்கள். உடனே பியூஸ் கோயல், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் போனில் பேசினார். எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவலை விலாவாரியாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிடிவாதம் இல்லாமல் இறங்கி வந்து பேசி தமிழகத்தில் நமது கட்சியின் நிலையை சொல்லி இருக்கிறார்கள். நாம் 8 முதல் 10 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் எப்படி? என்றார்.
அதற்கு அமித்ஷா நாம் அவர்களை எப்படியோ எடை போட்டோம். ஆனால் அவர்கள் இந்த அளவு தெள்ளத் தெளிவாக பேசி இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார்.
தொகுதி எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை. தமிழகத்தில் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷாவிடம் பியூஸ் கோயல் தெளிவாக எடுத்துச் சொன்னார். அதன்பிறகே அமித்ஷா நமது வெற்றிதான் முக்கியம். 5 தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே பா.ஜனதா 5 தொகுதிகளை பெற்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்துள்ளது.