கும்பகோணம், நவ. 28 –
கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் விழாவினை முன்னிட்டு இன்று முற்பகல் இவ்வாலயத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண திரளான முருகப் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில். இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதது இத்தலம் எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.
நக்கீரரால் திருமுருகாற்றுப் படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும், மேலும் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாததரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது இந்த சுவாமிமலை திருத்தலமாகும்.
இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று முற்பகல் வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார உலா நடைபெறுகிறது,
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 9 ஆம் நாளான திருக்கார்த்திகை தினமான 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை திருத்தேர் படம் பிடித்து திரு வீதி உலா இரவு தங்கமயில் வாகனத்தில் பிரகார உலாவும் அதனை தொடர்ந்து கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து மறுநாள் காவிரி கரையில் தீர்த்தவாரியுடன் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிறைவடைகிறது.





















