கும்பகோணம், செப். 12 –

கும்பகோணம் அருகேவுள்ள பெருமாண்டி கிராம ஆட்டோ நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கான மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவு பெற்று கடந்த 10ம் தேதி சனிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜைகளோடு துவங்கியது. அன்று மாலை கும்பலங்காரம், முதற்கால யாக பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை மூன்றாம் கால பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்று. அதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காம் காலம் யாகசாலை நிறைவுற்று மகாபூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து மேள தல மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனிதநீர் நிரப்பிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மேலும் இவ்விழாவில் பங்கேற்ற பக்த கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் கிராமவாசிகள் நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here