திருவண்ணாமலை ஜூலை-15- நிலத்தை தனது பெயருக்கு நயவஞ்சகமாக எழுதி வாங்கிக்கொண்ட மகன் தனக்கு சாப்பாடு போடாமல் அடித்து உதைத்ததாகவும் எனவே அவர் மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது மனுக்களை செலுத்த மாவட்ட ஆட்சியரகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்சியரகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் மனுவுடன வந்திருந்தனர். அப்போது அலுவலகத்துக்கு வந்த ஆட்சியர் பா.முருகேஷிடம் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். எனினும் மறுஅறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் மனுக்களை பெட்டியிலேயே செலுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனிடையே திருவண்ணாமலை வட்டம் சொரகொளத்தூர் கிராமம் சின்னதெருவை சேர்ந்த ஆதிமூலம் (72) என்ற முதியவர் சாப்பாடு போடாமல் மகன் கொடுமைப்படுத்துவதாக ஆட்சியரகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் முதியவர் ஆதிமூலம் கூறியிருப்பதாவது
எனக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது. எனது மனைவி சாவித்திரி உயிரிழந்துவிட்டார். எனது மகன்களின் ஒருவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார் இவர் என்னிடம் நயவஞ்சகமாக பேசி சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்வதாக கூறி எனது பெயரிலிருந்த நிலம் மின்மோட்டார் சர்வீஸ் எண்களை அவருடைய மகன் பெயரில் அவருடைய மனைவியை காப்பாளினியாகவும் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார். தற்போது எனக்கு சாப்பாடு போடாமல் என்னை அடித்து உதைக்கிறார் மேலும் எனது காலையும் உடைத்துவிட்டார். எனவே என்னிடமிருந்து எழுதி வாங்கிய நிலம் மற்றும் மின்மோட்டார் சர்வீஸை ரத்து செய்து அவர்கள் மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் 116ன்கீழ் நடவடிக்கை எடுத்து மீண்டும் எனது பெயரில் பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு!