திருவாரூர், நவ.22 –
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று கொட்டும்மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில், மக்கள் நலப்பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில், மக்கள் நலப்பணியாளர்களில் ஆண்கள் கோவனத்துடனும், பெண்கள் கை குழந்தைகளுடனும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி, பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் இப்போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலிருந்தும் 2000த்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திருவாரூர் வருகைதந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை அப்போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை போலவே, மக்கள் நலப்பணியாளர்களின் வாக்குகளைபெற வேண்டி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக அவர்கள் மேலும் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாரை ஆண்டுகளுக்கு மேலாகியும் 30 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி விட்டதாக தொடர்ந்து அவர்கள் பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்னர்.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 13.500க்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரை ஏமாற்றி அவர்களது வாக்குகளைபெற 2021 சட்டமன்ற தேர்தலின்போது பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணிபாதுகாப்பு என வாக்குறுதிகளை அளித்ததை நம்பி வாக்களித்து ஏமாற்றப்பட்டுவிட்டோம். தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு மக்கள் நலப்பணியாளர்களை முதல்வர் ஸ்டாலின் நிலைக்கு தள்ளிவிட்டார் என தெரிவிக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலினை கண்டித்து நடைப்பெற்ற இப் பிச்சை எடுக்கும் போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைப்பெற்றது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.தொடர்ந்து கைது செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸாருக்கும், மக்கள் நலப்பணியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கைது செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை அழைத்துச் சென்றனர்.























