திருவண்ணாமலை ஜூலை-15- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் செங்கத்தில் 1971ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விவசாய பண்ணைகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் 10 ஆண்டுகள் நட்டத்தில் இயங்கிய இந்த விவசாய பண்ணை பின்னர் பழங்கள் விதை உற்பத்தியில் லாபகரமாக செயல்பட தொடங்கியது. 25 ஆண்டுகள் கடந்த பின்னர் பண்ணையை தொடர்ந்து நடத்த முடியாமல் 1996ல் மூடப்பட்டது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். இதற்கிடையில் இந்த விவசாய பண்ணையில் தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்கள் மேல்செங்கம் விதைப் பண்ணையை திறந்து விவசாய கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வாக்குறுதி அளித்திருந்தனர். மேலும் செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பெ.கிரியின் முயற்சியால் மேல்செங்கம் விதைப்பண்ணை தொடர்பான விவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி மு.பெ.கிரி எம்எல்ஏ செங்கம் தாசில்தார் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மூடப்பட்டுள்ள மேல்செங்கம் விவசாய பண்ணைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.