சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் இருந்து எடமணல் கிராமம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்க பணிக்காக சாலை ஓரத்தில் உள்ள பொறை வாய்க்காலின் நடுவே குழி பறிக்கப்பட்டு தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பு சுவர் பொறைவாய்க்காலின் அகலத்தைக் குறைத்து கட்டப்படுவதால் பாசனத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படும் எனவும், மேலும் மழைக் காலங்களில் சீர்காழி நகர் பகுதியில் இருந்து மழைநீர் இந்த வாய்க்காலின் வழியாகதான் வடிந்து செல்வதற்கு பயன் படுகிறது.
தற்பொழுது வாய்க்காலின் அகலத்தை குறைத்து தடுப்பு சுவர் கட்டப்படுவதால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக கட்டப்படும் தடுப்புச் சுவரை அகற்றி சாலை ஓரத்தில் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளரிடம் தொலைபேசி வாயிலாக கேட்கும் பொழுது தங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் பொறை வாய்க்காலில் உள்ளே தடுப்பு சுவர் கட்டி உள்ளதாகவும் மேலும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.