கும்பகோணம், டிச. 30 –
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டன்று செய்யக்கூடிய படி பூஜையை ஆங்கில புத்தாண்டு அன்று செய்வது தமிழுக்கும், தமிழ் கடவுளுக்கும், செய்யும் மிகப்பெரிய தீங்காகும்.
ஆங்கில புத்தாண்டு அன்று படி பூஜை செய்வதை திருக்கோயில் நிர்வாகம் கைவிடவேண்டும் என வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் இந்து அமைப்புகள் சார்பில் மனு அளித்தனர். மேலும் மீறி நடத்தினால் இந்து சமய அறநிலை துறை அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்துவோம் என அவர்கள் அக்கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி திருக்கோயில் என்பது, தமிழ்க் கடவுள் முருகனின் நான்காம் படை திருத்தலமாகும். மேலும், சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் முருகப்பெருமானை தரிசனம் செய்ய 60 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் தமிழ் வருடங்களான பிரபவ முதல் அட்சய வரையிலான் 60 தமிழ் வருட பெயர்களை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் தமிழ் வருடங்களின் பெயர்களை அப்படிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சிறப்பு தமிழகத்தில் எந்த கோயிலிலும் கிடையாது. மேலும், இக்கோயிலில் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி தமிழ் வருட பிறப்பு அன்று 60 படிகளுக்கும் பூஜை செய்து அந்தந்த ஆண்டின் பலன்கள் குறித்து பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கமாக நடைப்பெற்று வருகின்றது.
மேலும் அந்நாளில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் தமிழ் மொழிக்கு நாம் சமர்ப்பிக்கின்ற பூஜையாகவும் 60 படிக்கட்டுகளில் பூஜைகள் ஆகம முறைப்படி தமிழ் வருட பிறப்பு அன்று மட்டும் தான் நடக்கும்.
ஆனால் தற்போது கடந்த சில வருடங்களாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் ஆகம விதிகளுக்கு மாறாக, முரண்பட்டு மேற்கத்திய கலாச்சாரமான ஆங்கில புத்தாண்டு அன்று 60 படிகளுக்கு பூஜை செய்து வருவது முருக பக்தர்களுக்கும் தமிழின் மீது பற்றுள்ள எங்களை போன்றவர்களுக்கும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. என அவர்கள் தெரிவித்தனர்.
ஆகம விதிகளுக்கு மாறாக தமிழ் புத்தாண்டில் செய்யக்கூடிய படி பூஜையை ஆங்கில புத்தாண்டு அன்று படி பூஜை செய்வது தமிழுக்கும் தமிழ் கடவுளுக்கும் செய்யும் மிகப்பெரிய தீங்காகும்.எனவும்,
ஆங்கில புத்தாண்டு அன்று படி பூஜை செய்வதை திருக்கோயில் நிர்வாகம் கைவிட வேண்டும். இனிவரும் காலங்களில் ஆகம முறைப்படி தமிழ் வருட பிறப்பு அன்று மட்டுமே படி பூஜை செய்யவேண்டும் எனவும்,
மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு நடைபெற்றால் அனைத்து இந்து கூட்டமைப்பு சார்பில் திருக்கோயிலுள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா தலைமையில் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் மனு அளித்தனர்.
இதில் அனுமன் சேனா மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் அகில பாரத இந்து ஆன்மீக பேரவை மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கண்ணன் சிவசேனா தஞ்சை கோட்டத் தலைவர் குட்டி சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆனையரிடமும் கோரிக்கை மனுவினை அவர்கள் வழங்கினார்கள்.






















