கும்பகோணம், டிச. 19 –

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது.

மேலும், அந்த நியாய விலை கடை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கணபதி அக்கரஹாரம் அய்யம்பேட்டை சாலையில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே 20 ஆண்டுகளாக இருந்த கடையில் பொருட்கள் வாங்கி வந்த பயனாளிகளை புதியதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு மாற்றம் செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தூரம் கருதி அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அம் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தியும் அப் பகுதி மக்கள் கும்பகோணம் திருவையாறு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து நீண்ட நேரமாக நடைப்பெற்ற அச்சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இயங்கி வரும் கடையை மாற்றம் செய்தால் சாலையை கடந்து சென்று பொருட்கள் வாங்கும் பொது மக்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், புதிதாக திறக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடையை அப்பகுதியில் உள்ள பொது மக்கள் பொருட்கள் வாங்க வழிவகை செய்யுமாறு பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here