சென்னை, அக். 19 –

நெம்மிலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்குக் கடற்கரை சாலை நெம்மிலியில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடி நீராக்கும் நிலையம் மற்றும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் அளவிலான சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

சென்னைக்கு அருகே வற்றாத நீராதாரங்கள் இல்லாத காரணத்தினால் சென்னை பெருநகரம் வடகிழக்கு பருவமழை நம்பியே உள்ளது அதுப் பொய்க்கும் காலங்களில் நகரின் நீண்ட காலக்குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடி நீரைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடல் நீரைக் குடி நீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது. கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஏற்கனவே மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல் நீரைக் குடி நீராக்கும் முதல் நிலையம் 2010 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் திறந்து வைக்கப் பட்டது.

இரண்டாம் நிலையமாக நெம்மிலியில் ரூ. 805 கோடியே 8 இலட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல் நீரைக் குடி நீராக்கும் நிலையம் கடந்த 23. 2. 2010 அன்று அன்றைய துணை முதலமைச்சரும் இன்றைய முதலமைச்சருமான ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப் பட்டு 2013 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இன்று முதலமைச்சர் ஆய்வு மேற் கொண்ட 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடி நீராக்கும் நிலையத்தில் இருந்து குடிநீர் தென் சென்னையில் அமைந்து உள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலங்கரை, சோழிங்கநல்லூர், மற்றும் தகவல் தொழில் நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்குக் குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப் பட்டு இதனால் சுமார் 10 இலட்சம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து நெம்மேலியில் ரூ.1259 கோடியே 38 இலட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரைக் குடி நீராக்கும் நிலையம் அமைப்பதற்காக நடைப் பெற்று வரும் கடல் நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, சுத்திகரிக்கப் பட்ட நீர் தேக்கத்தொட்டி, சுத்திகரிக்கப் பட்ட நீர் உந்து நிலையம், வடி கட்டப்பட்ட கடல் நீர்தேக்கத் தொட்டி மற்றும் உந்து நிலையம், காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறைப் பரவல் நிலையம், நிர்வாக கட்டடம், கசடுகளை கெட்டிப் படுத்தும் பிரிவு செதிலடுக்கு வடிகட்டி போன்ற கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார் இப் பணிகளை திட்டமிட்டப் படி ஏப்பரல் 2023 க்குள் முழுமையாக முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும் இத்திட்டத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடைப் பெற்று வருகிறது. இதன் பகுதியாக முட்டுக்காடு பகுதியில் நடைப்பெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் வாயிலாக பெறப்படும் குடி நீர் மூலம் தென் சென்னை பகுதிகளான உள்ளகரம், புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர்,புனித தோமையர் மலை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில் நுட்ப வழித்தடப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவர்.

இந் நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை குடி நீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயராஜ் குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.ஆர்.ராகுல்நாத், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் பி.பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here