பொன்னேரி, ஏப். 08 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கில வழி கல்வி உதவி பேராசிரியராக பணிபுரிந்த மகேந்திரன் என்பவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து நேற்று அனைத்து மகளிர் காவல் துறையினர் பெண் வன்கொடுமை, மானபங்கம் படுத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்து உதவி பேராசிரியர் மகேந்திரனை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மாணவிக்குஞ பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் மகேந்திரனை பணிநீக்கம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் அவருக்கு வழங்க கூடாது பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் பல்வேறு துறை சார்ந்த உறுப்பினர்கள் அடங்கிய பெண்கள் குறைதீர்ப்பு குழுவை அமைக்க வேண்டும், பாலியல் தொல்லை தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உதவி பேராசிரியருக்கு துணைபோன கல்லூரி முதல்வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பாக திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவ்வழியாக வந்த வாகனங்களை ஆவேசமாக தடுத்து நிறுத்திய மாணவர்கள் சிலர் அதன் மீது ஏறி நின்று ரகளையில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் மூலம் அவருக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று உறுதிபட தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மாணவர்களின் இந்த போராட்டத்தால் செங்குன்றம் திருவெற்றியூர் இடையே செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.






















