சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அமைகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும் இடம் பெறுகிறது. அ.திமு.க- பா.ஜனதா தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறுகிறது. இதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயல் சென்னை வருகிறார்.
தி.மு.க. தரப்பில் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோருடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அடுத்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இரு கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர்.
இந்த கூட்டணியில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிடுகிறது. தமிழகம்- புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 25 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதம் உள்ள 15 தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டி இருப்பதால் ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதிகள் தர முடியும் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2004 தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. 2009 தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே 2004 தேர்தல் போல் இப்போது 10 தொகுதிகளாவது வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது.
இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கிறது. டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்ற தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று முறைப்படி காங்கிரசுடன் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள்.
காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பற்றி இரு தரப்பினர் பேச்சு நடத்தினார்கள்.
இதுபற்றி தி.மு.க. தரப்பில் கூறும்போது, “தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று தொடங்கியுள்ளது. இது ஆரம்ப கட்ட நிலையிலான பேச்சுவார்த்தைதான். இன்றும் டெல்லியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. பா.ம.க. ஏற்கனவே அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் 15 தொகுதிகளில் 4 தொகுதிகள் ஒதுக்க முன் வந்துள்ளது.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு கூடுதலாக புதுவை தொகுதியை விட்டுத் தரவும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை விரும்புவதாகவும் பா.ம.க. இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அன்புமணியின் விருப்பத்துக்கு கட்சி தலைவர் ஜி.கே.மணியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் தி.மு.க.வுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தங்கள் கூட்டணிக்கு பா.ம.க. வருவதை தி.மு.க.வும் காங்கிரசும் விரும்புகின்றன.
ஆனால் திருமாவளவன் எதிர்ப்பு காரணமாக தி.மு.க. தயங்குகிறது. பா.ம.க. இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறாது என்று திருமாவளவன் திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
இதனால் திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு செல்வாக்கு உள்ள சிதம்பரம் தொகுதியை விட்டுக் கொடுக்க தி.மு.க. முன் வந்துள்ளது.
டாக்டர் ராமதாஸ்- திருமாவளவனை ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்காக திருமாவளவனை சமாதானப்படுத்தும் வகையில் பேச்சு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது போக தி.மு.க. மட்டும் 22 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், காங்கிரசுக்கு 8 (புதுவை உள்பட) பா.ம.க. வந்தால் 5 தொகுதி, இரு கம்யூனிஸ்டுகளுக்கு தலா ஒரு தொகுதி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் அந்த கட்சி தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் நிபந்தனையுடன் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.