மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் ஒரு ஆண்டு நிறைவு விழா இன்று மாலை திருநெல்வேலியில் பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதில் கலந்து கொள்கிறேன்.
இன்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். அவர் நடிகையாக இருக்கும் போதே எனக்கு நன்றாக தெரியும். அவருடன் பணிபுரிந்து இருக்கிறேன். இன்று அவருடைய தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.
அரசியலில் வாரிசு அரசியல் இருக்கக் கூடாது. அரசியல் ஒரு சமதளமாக இருக்க வேண்டும். வேறு எந்த தொழிலில் வேண்டுமானாலும் பரவாயில்லை. சில விஷயங்களில் வாரிசுகள் இருக்கக் கூடாது.
பாராளுமன்ற தேர்தலில் எங்களைப்போல் ஒத்த கருத்து உடையவர்கள் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு நிஜமாகவே அக்கறை உள்ளவர்கள் மட்டுமே எங்களுடன் கூட்டணி அமைக்க முடியும். இதுவே முதல் தகுதி என்று பார்க்கிறேன்.
அப்படிப்பட்ட கட்சிகள் தமிழகத்தில் கண்டிப்பாக இருக்கிறது. அவர்கள் தொடர்பு கொண்டு பேசிய பிறகு எங்களுடைய உறவு நிச்சயிக்கப்படும். அப்போது நிச்சயமாக சொல்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் யார்? யார்? போட்டியிடுவது என்று ஆலோசித்து வருகிறோம். முடிவுக்கு பின்னர் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.