ஸ்ரீநகர்:
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டியுள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் 7 மணிக்கு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும், எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.