திருவாரூர், ஆக. 24 –
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு இணைந்து நடத்தும், ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை 4 மணிக்கு பக்தி இன்னிசையுடன் துவங்கி இரவு 8 மணிக்கு சீனிவாச திருகல்யாணம் வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ தேவி பூதேவி தாயாருக்கு திருமாங்கல்யதாரணம் எனும் திருக்கல்யாண வைபவம் தண்டனை எஸ். வி. டி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.
ஆனந்த குருகுலம் மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி, திருவாரூர் வேலுடையார் கல்வி குழுமத்தின் தலைவர் கே. எஸ். எஸ். தியாகபாரி, சோழமண்டல தமிழ் இலக்கிய அமைப்பு பொது செயலாளர் சிவகுருநாதன் ஆகியோரின் தலைமையில், திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு கௌரவ தலைவர் ஸ்ரீதரன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
முன்னதாக ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு நிறுவனத் தலைவர் ஜே. கனகராஜன் எழுதிய ’60 வயது கடந்து வந்த பாதை’ என்ற நூல் மற்றும் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ராகவன் குருஜி ஆகியோர் கலந்து கொண்டு நூல்களை வெளியிட ஸ்ரீ நாராயணி நிதி நிறுவன தலைவர் கார்த்திகேயன் மற்றும் புலவர் சண்முக வடிவேல் ஆகியோர் நூல்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும் ‘திருமாலின் பெருமை’ என்ற தலைப்பில் கலைமாமணி தேச மங்கையர்கரசி சொற்பொழிவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழிசை சுடர் சுசித்ரா குழுவினர் ‘பெருமாளின் பக்தி இன்னிசை’ நிகழ்ச்சியும் நடைபெற்றது.