அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவல் பாதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறியிருந்தார். பிறகு உடல்நிலை மோசமாதனால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று மதுசூதனன் உயிர் பிரிந்தது.

சென்னை, ஆக 5 –

இ.மதுசூதனன் அதிமுகவின் மூத்த தலைவர், அதிமுக அவைத் தலைவர், முன்னாள் அமைச்சர் என பல்வேறு முகங்களை கொண்டவர். சென்னையில் பிறந்த இவர், அதிமுகவின் மிகப் பழைமையான உறுப்பினர்களில் ஒருவர். தனது 14 வயதில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கி, திமுகவிலிருந்து பிரிந்து வந்த பின்னர் எம்.ஜி.ஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய காலம் முதல் அதிமுகவில் வட சென்னையின் மூத்த முகமாக, மிகப் பெரும் அரசியல் வாதியாக உருவெடுத்தார்.

1991ல் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிப் பெற்று ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் 91 முதல் 96 வரை கைத்தறித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர் பாளராகவும் மதுசூதனன் பொறுப்பு வகித்துள்ளார். 2000ஆம் ஆண்டில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து மதுசூதனனை நீக்கினார் ஜெயலலிதா. பின்னர் அவர் அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர் மன்ற செயலாளராக பொறுப்பேற்றார்.

தனது அரசியல் பயணம் முழுக்க மாவட்ட செயலாளர் முதல் அவைத் தலைவர் வரை அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பெருமை மதுசூதனனுக்கு உண்டு. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்து வந்தவர் மதுசூதனன். 2017ல் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ்-க்கு ஆதரவாக நின்றவர் மதுசூதனன். இ.பி.எஸ். அணி – ஓ.பி.எஸ். அணி என அதிமுக இருந்த போது மதுசூதனனிடமே கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 ‘மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அதிமுகவின் அவைத் தலைவர்’ என ஜெயலலிதா அறிவித்தது கடைசி வரை பின் பற்றப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வட சென்னையில் வசித்து வந்தவர். மதுசூதனன். இவரை அரசியல் வட்டாரங்களில் மது அண்ணன் என பாசமாக அழைத்து வந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here