திருவண்ணாமலை, செப்.3-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சு.முருகன் தலைமையில் அருந்ததியினர் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்வணக்கம்பாடி அருந்ததியர் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக அருந்ததியினர் இன மக்கள் வசித்து வருகிறோம். அருந்ததியர் இன மக்கள் பயன் படுத்தி வரும் பொது வழிப் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பினை அகற்றி அருந்ததியினர் விளையாட்டு மைதானம், பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் குழந்தைகள் விளையாடவும் பொதுவழி ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்டுத் தருமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் உடனடியாக தண்டராம்பட்டு தாசில்தாருக்கு பரிந்துரை செய்து பொதுவழிப்பாதை ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவிட்டார். ஏற்கனவே இதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பொது வழிப்பாதை அகற்ற ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து 2 மணி நேரத்தில் ஒருவர் ஆக்கிரமித்திருந்த பொது வழிப்பாதை இடத்தினை தாசில்தார் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றி பொது வழிப்பாதையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.