திருவாரூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
டெல்லியில் தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாயிகளை திருவாரூர் மாவட்ட எஸ்.பி. வலுகட்டாயமாக தரதரவென இழுத்து சென்று கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது, விவசாயிகள் திடீரென காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு விவசாயிகள் அருகில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியது.
தேர்தல் வந்தால் விவசாயிகளை முதுகெலும்பு என சொல்லும் ஆட்சியாளர்கள் தேர்தல் முடிந்ததும் அடிமையாக விவசாயிகளை பார்க்கிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் விவசாயிகள் விலைவிக்கும் பொருளுக்கு லாபகரமான விலையை தருவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். பிரதமர் மோடியின் வாக்குறுதியினை நிறைவேற்ற கோரி டெல்லியில் விவசாயிகள் அமைதி வழியில் போராட்டம் நடத்தினால் மத்திய அரசு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் விவசாயிகளை அச்சுறுத்தி விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு புறக்கணித்து தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
அதனைக் கண்டிக்கும் வகையிலும், மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தேசிய தென்னிந்திய நிதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திரளான விவசாயிகள் திருவாரூர் இரயில் நிலையத்தில் எர்ணாகுளம்-காரைக்கால் வரை செல்லும் பயணிகள் இரயிலை மறைக்க இரயில் நிலையம் நோக்கி சென்றனர்.
அப்போது அங்கு வந்த திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் விவசாயிகளை ஒருமை பேசி கண்டித்தும், விவசாயிகளை வலுகட்டாயமாக தரதரவென இழுத்து கைது செய்ய சக காவலர்கள் துணையோடு முற்பட்டார். அப்போது விவசாயிகள் இரயில் நிலையம் வாயில் முன்பு தரையில் படுத்து மத்திய, மாநில அரசுகளே விவசாயிகளை வஞ்சிக்காதே, காவல்துறையை ஏவி விவசாயிகளை கொலை செய்யாதே என உரக்க முழக்கமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட விவசாயிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றி பனகல்சாலை என்ற பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கிற்கு கொண்டு சென்றனர். அப்போது காவல்துறை வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் பனகல் சாலையில் தரையில் படுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவலர்கள் அச்சுறுத்திய நிலையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத்தலைவர் தமிழ்செல்வன், லால்குடி பகுதியை சேர்ந்த தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் பனகல்சாலையில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி திருவாரூர் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து தற்கொலைக்கு முயன்றனர். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாகண்ணு,
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் கரும்புக்கு லாபகரமான விலையை தருவதாக கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விவசாயிக்ள உற்பத்தி செய்யும் பொருளுக்கு லாபகரமான விலையை வழங்கும் வரை விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும் எனவும், 15 லட்சம் கோடி கார்ப்பரேட் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகள் வாங்கிய 1 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை நிறுத்திட மத்திய அரசு முயன்றுவருவதாகவும், இதனை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பயிர்காப்பீடு திட்டத்தை தனியார் கம்பெனி நடத்தி வருவதில் முறைகேடு நடப்பதாகவும் அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக நாங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுவருதாகவும், இங்கேயும் காவல்துறை விவசாயிகளை அச்சுறுத்தி போராட்டத்தை நடத்தவிடாமல் செய்துவருவதாகவும் குற்றம் சாட்டினார்.