குடவாடசல், டிச. 26 –
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக அவ்வூர் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி வெகுவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா புளிச்சக்காடி எனும் குக்கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த திலகவதி மகன் பாலபுகழேந்தி (28). தற்போது பாலபுகழேந்தி தனது குடும்பத்தாருடன் வலங்கைமான் பகுதியில் வசித்து வருகிறார்.
பாலபுகழேந்தி புளிச்சக்காடி கிராமத்தில் உள்ள குளத்தில் தனது மாமா துணையுடன் 2014ம் ஆண்டு முதல் நிச்சல் பயின்று வந்துள்ளார். மேலும் பாலபுகழேந்தி தனது பள்ளி பருவம் முதல் குளத்தில் நீந்தி குளித்து பின்னர் நீண்ட நேரம் குளத்தின் நீரில் மிதப்பதில் தீராத மோகம் கொண்டிருந்த நிலையில் அதன் தொடர் முயற்சியாக கல்லூரி பருவத்திலும் இடைவிடாது அப்பயிற்சியினை மேற் கொண்டு வந்துள்ளார்.
மேலும் பிஎஸ்ஸி கணினி அறிவியல் பிரிவில் பிஎஸ்ஸி பட்டம் பெற்ற பாலபுகழேந்தி கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிப் புரிந்து வரும் நிலையில், நமது தாய் திருநாட்டின் பெருமையினை நிலை நிறுத்திடும் வகையில், உலக அரங்கில் காட்டிட வேண்டும் என்ற திட்டமிட்டு அங்குள்ள குளம் ஒன்றில் தண்ணீரில் மிதக்கும் பயிற்சியினை இடைவிடாது மேற்கொண்டு வந்துள்ளார்.
அத்தகைய சூழலில் பாலபுகழேந்தி உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட் புத்தகத்தில் தனது சாதனையினை நிகழ்த்திட ஏதுவாக அதற்கான முன்னோட்டமாக இதுவரை உலக சாதனை கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தில் நிகழ்த்த படாத சாதனையாக தொடர்ச்சியாக 24 மணி நேரம் குளத்தின் தண்ணீரில் மிதக்கும் சாதனையை நிகழ்த்த தீர்மானித்துள்ளார்.
அதன்படி தனது சொந்த ஊரான புளிச்சாக்காடி கிராமத்தில் உள்ள குளத்தில் பாலபுகழேந்தி கடும் குளிரிலும், அவ்வப்போது பெய்த சாரல் மழைக்கும் இடையே உலக சாதனை என்ற ஒற்றை குறிக்கோளோடு குளத்தின் தண்ணீரில் மிதக்கும் சாதனையை கடந்த டிச 23 ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு கிராம மக்கள், ஊராட்சி மன்றத்தலைவர், கிராம முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தொடங்கினார்.
அதாவது உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட் சட்டவிதிகளின்படி சாதனை நிகழ்த்தும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடம் ஓய்வு என்ற விதிகளுக்கு உட்பட்டு அன்றையத்தினம் காலை 10.30 மணிக்கு தனது சாதனை பயணத்தை மேற்கொண்ட பாலபுகழேந்தி கடந்த டிச 24 ஆம் தேதி முற்பகல் 12.15 மணிக்கு நிறைவு செய்தார்.
அதன்படி பாலபுகழேந்தி 24 மணி நேரம் 15 நிமிடம் வரை தண்ணீரில் மிதக்கும் சாதனையை நிகழ்த்தி நிறைவு செய்தார்.
சாதனையை நிறைவு செய்து அவர் குளத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த புளிச்சக்காடி கிராம மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது பாலபுகழேந்தி கிராம மக்களை பார்த்து கைகூப்பி வணங்கி தனது நன்றியை தெரிவித்தார். மேலும் சாதனையாளர் பாலபுகழேந்திக்கு ஊர் மக்கள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அவரது நண்பர்கள் சாதனை நிகழ்த்திய பாலபுகழேந்தியை கௌரவிக்கும் வகையில் கேக்வெட்டி கொண்டாடினர்.
பின்னர் சாதனையாளர் பாலபுகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
எனது சாதனையை கின்னஸ் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற செய்ய நான் விண்ணப்பத்திருந்தேன். அதன்படி கின்னஸ் நிர்வாகம் குளத்தின் தண்ணீரில் மிதக்கும் சாதனையை சரிபார்க்கும் வகையில் அதற்கான வீடியோவை பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அத்தகைய சாதனையை மேற்கொண்டாக கருத்து தெரிவித்தார்.
பேட்டி: சாதனையாளர் பாலபுகழேந்தி பேட்டி.



















