கும்பகோணம், டிச. 26 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்திருந்தது. அது தவிர மேலும் பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் பெற்று பயனடைந்து அந்த கடனை திரும்ப செலுத்தாததால், அதுவும் விவசாயிகள் தலையில் விழுந்தது,
இந்நிலையில் கடந்த 2017ல், ஆலை நலிவுற்றதாக கூறி, திருஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்டது மூடப்பட்ட சர்க்கரை ஆலையை சமீபத்தில், கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது. கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் சீரமைப்பு பணிகளை தொடங்கிய போது, அதனை கரும்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தியதுடன் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு உங்களது பணியை தொடங்குங்கள் என தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை காலதாமதம் இன்றி உடனே வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர், இந்நிலையில் 391 வது நாளாக போராடி வருகின்றனர். தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்று தருமாறு என் மண் என் மக்கள் நிகழ்ச்சிக்கு கும்பகோணம் வருகை தந்த போது அண்ணாமலை வாகனத்தை விவசாயிகள் மறித்து கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை கரும்பு விவசாயிகளிடம் உங்கள் பிரச்சினைகளை கையில் எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.






















