பொன்னேரி, மே. 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதற்காக இன்று பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை சிறப்பு தணிக்கை குழு ஆய்வு செய்து வருகின்றனர்.

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி அடங்கிய குழுவினர் அப்பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்துதல், படிக்கட்டு வசதிகள் அவசர கால கதவுகள், முதலுதவி பெட்டிகள், ஜன்னல் பாதுகாப்பு வசதிகள், புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரி, வாகனங்களின் தரை உறுதித்தன்மை, தீயணைப்பு கருவி, பள்ளி வாகனம் என சின்னம் அச்சிடல், வாகனத்திற்கு மஞ்சள் வண்ணம், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ஜிபிஎஸ் கருவி பொருத்துதல் உள்ளிட்ட 21அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என இந்த ஆய்வின் போது சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றது.. பள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது, தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

தொடர்ந்து தனியார் பள்ளி ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு அதில் நூற்றக்கணக்கான ஓட்டுநர்களுக்கு கண் பார்வை சோதனை நடத்தப்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here